கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் சான்றுப் பொருள் காப்பகம் அடையாளம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சான்றுப் பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்க நீதிமன்றம் மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பொலிஸார் மறுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிமன்றம் பூட்டப்பட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் வந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் நீதிமன்றம் இயங்கவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றம் அமர்வுகளின் போது, சான்றுப் பொருள் காப்பகம் உடைக்கப்பட்டு சான்றுப் பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கிளி.பொலிஸ் நிலையத்தின் தடயவியல் ஆய்வு பொலிஸார் மற்றும் மோப்ப நாய்களை கொண்டு இன்றைய தினம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், மேற்படி இரு விடுமுறை, தினங்களிலும் காவல் கடமையில் இருந்த காவலாளிகள் மற்றும் சான்றுப் பொருட்கள் காப்பகத்தின் பணியாளர்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் உன்மையில் என்ன நடந்தது? சான்றுப் பொருட்கள் எவையேனும் திருடப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள், எவையும் கிடைக்கவில்லை.
