Tuesday, September 22, 2015

இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து சுட்டுப் படுகொலை செய்தது: ஐ.நா.

இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா உயிருடன் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை கல்லம் மெக்ரே ஆவணப்படமாக்கினார்.

இந்த ஆவணப்படத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் கைது செய்து பின்னர் படுகொலை செய்த வீடியோ, புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

ஆனால் இதை இலங்கை அரசும் ராணுவமும் தொடர்ந்து மறுத்துவந்தது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்து படுகொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சோபனா தர்மராஜா என்ற இசைப்பிரியா, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தி வாசிப்பாளர். அவர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான ஏராளமான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மே 18-ந் தேதி காலை வட்டுக்காவல் பாலத்தின் வடக்கே நந்திக் கடல் பகுதியில் இருந்து இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் கைது செய்ததை பலரும் நேரில் பார்த்திருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்வதை ஒரு வீடியோ காட்சி உறுதிப்படுத்துகிறது.

அப்போது இலங்கை ராணுவம் அவர் போர்த்திக் கொள்ள மேலாடை ஒன்றையும் கொடுத்ததும் அதில் இடம்பெற்றுள்ளது.

அந்த மேலாடை போர்த்தப்பட்ட நிலையில் இளம்பெண் அருகே இசைப்பிரியா உட்காரவைக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

அதேபோல் இசைப்பிரியா உயிரிழந்த நிலையில் சடலமாக இருக்கும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இதில் இசைப்பிரியாவின் உடல் உறுப்புகள் தெரியும் வகையில் உடைகள் திட்டமிட்டே விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை தடவியல் துறையினர் ஆராய்ந்த போது இலங்கை ராணுவத்தால் இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Theepan N

About Theepan N

கிளிநொச்சி இணையதள பக்கத்துக்கு வரவேற்கின்றோம்.

Subscribe to this Blog via Email :