ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து விரிவாக புத்திசாலித்தனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். சில ஊடகங்கள் இந்த அறிக்கை தொடர்பாக கருத்துக்கள் தவறானதெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கூட்டாக ஊடகங்களின் பிரதானிகளை கடந்த வெள்ளிக் கிழமை சந்தித்த போது தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை அரசு ஆராய்ந்து வருவதாகவும் எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடப்படவுள்ள இறுதிப் பிரேரணையின் பின்னர் இலங்கை ஒரு தீர்க்கமான முடிவை எடுக்குமெனவும் தேசிய விசாரணை அல்லது சர்வதேச விசாரணை ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படலாமெனவும், இருந்தும் இலங்கை தேசிய விசாரணையை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களும் சில கட்சிகள் விமர்சிப்பது போல் வெளியிடப்பட்ட அறிக்கை பயங்கரமானது அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, கடந்த புதன்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹுசேன் வெளியிட்ட அறிக்கை குறித்து அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் எதிரானதும் ஆதரவானதுமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
ஜே.வி.பி. எதிர்ப்பு
யுத்தக் குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்ற விசாரணையை இலங்கை ஏற்கக்கூடாதென ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதியரசர்களை கலப்பு நீதிமன்றத்துக்கு நியமிப்பது இலங்கை விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவது போலாகும் என்று அவர் விமர்சித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக் ஷ எதிர்ப்பு
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டார்கள் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். படையினர் யாராவது குற்றமிழைத்திருந்தார்கள் என்றால் தண்டிக்கப்பட வேண்டும். முழுப்படையினர் மீதும் குற்றம் சுமத்தக் கூடாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரஜைகள் அமைப்புக்களின்
கூட்டமைப்பு வரவேற்பு
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையின் படி இலங்கையில் வெளிநாட்டு நீதியரசர்களுடன் கூடிய நீதிமன்ற விசாரணை யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுக்குமென பிரஜைகள் அமைப்புக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு
கலப்பு நீதிமன்ற விசாரணை உள்நாட்டில் நடத்தப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வரவேற்றுள்ளது.
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை படையினர் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகிய இரண்டு தரப்பும் யுத்தத்தின்போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அறிக்கையின்படி பெரும்பாலான குற்றச்செயல்களில் அரச படையினர் ஈடுபட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.
* மிகக்கொடூரமான பாலியல் வன்முறைகள்
* நீதிக்கு புறம்பான கொலைகள்
* சரணடைந்தவர்கள் காணாமற் போனமை
* வெள்ளை ேவன் கடத்தல்கள்
* மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல்கள்
* குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமை
போன்ற விடயங்கள் பல தரப்பினராலும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவங்களை நேரில் கண்டோரின் சாட்சியங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் வெளியிட்டு உரையாற்றினார். இக்குற்றங்கள் தொடர்பாக கலப்பு நீதிமன்றம் அமைத்து இலங்கை விசாரணை செய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கலப்பு நீதிமன்றம் என்றால் என்ன?
கலப்பு நீதிமன்றம் என்பது சர்வதேச நீதியரசர்கள் மற்றும் உள்ளூர் நீதியரசர்களைக் கொண்டு அமைக்கப்படும் நீதிமன்றமாகும். இதில் வெளிநாட்டு சட்டத்தரணிகளும் உள்ளடக்கப்படலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிபாரிசின்படி இந்த கலப்பு நீதிமன்றங்கள் தற்போது நான்கு நாடுகளில் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஆபிரிக்கா, சியராலியோனில் ஒரு கலப்பு நீதிமன்றம் சிறுவர் விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
லெபனானில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றம் இஸ்ரேல் தொடர்பான அத்துமீறல்களை விசாரணை செய்து வருகின்றது.
கம்போடியாவிலுள்ள கலப்பு நீதிமன்றம் பொல்பொட் தொடர்பாகவும் இனப்படுகொலை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
கிழக்கு திமோரில் அமைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றம் இந்தோனேஷிய விவகாரம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கலப்பு நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் இடம்பெற்ற உள்ளூர் வன்முறைகள், இனப்படுகொலைகள் தொடர்பாகவே விசாரணை களை மேற்கொண்டு வருகின்றன.
சர்வதேச நீதிமன்றங்கள்
இரு நாடுகளுக்குமிடையிலான மோதல்கள், இரு நாடுகளுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறுதல் போன்ற விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூன்று நீதிமன்றங்கள் நெதர்லாந்தில் இயங்கி வருகின்றன.
கலப்பு நீதிமன்றம் அமைக்க இலங்கை சட்டத்தில் இடமுள்ளதா?
ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையின் படி இலங்கையின் சட்டங்களின்படி கலப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை. இலங்கையில் கலப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு நீதித்துறைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கலப்பு நீதிமன்றம் அமைத்து உள்ளூரிலேயே விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலே தெரிவித்துள்ளதை இலங்கை ஏற்றுக்கொண்டாலும் கலப்பு நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பிக்க நீண்ட காலம் எடுக்கலாம்.
இலங்கையில் கலப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு ஏதுவான வகையில் புதிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றும் கலப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்றாலும் தீர்ப்பு வெளிவர பல வருடங்களாகலாமென்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இனவாதம் கக்கும்
அரசியல்வாதிகள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னரே ''சீபா'' ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திடப்போவதாகக் கூறி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக தனது கோஷ்டியினருடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கத் தொடங்கி விட்டார்.
''சீபா'' ஒப்பந்தத்தில் இலங்கை சார்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் கைச்சாத்திடப் போகின்றார். அப்படி கைச்சாத்திட்டால் இலங்கை இந்தியாவின் ஒரு காலனித்துவ ஆட்சிக்குக் கீழ் வந்து விடும். இந்திய வைத்தியர்கள், பொறியியலாளர்கள் இங்கு வந்து சுதந்திரமாக தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று விமல் வீரவன்ச பேசத் தொடங்கி விட்டார்.
அதுமட்டுமன்றி, இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலைக்கு இலங்கை வந்தோர் இன்று காணி உரிமையும் கேட்கின்றனர். இந்த நிலையில் ''சீபா'' ஒப்பந்தமும் கைச்சாத்தாகி விட்டால் இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடாக மாறி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
விமல் வீரவன்ச எம்.பி.யின் கூற்று முற்றும் முழுவதுமான இனவாதத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் செல்லும் முன்னரே ''சீபா'' ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அனுமானித்து அவர் அதை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி 2002 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த போது இந்திய அரசாங்கத்துடன் ''சீபா'' ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடத் தயாரானது. உள்ளூர் வர்த்தக சமூகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ''சீபா'' ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்முறை பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த போது இந்தியாவுடன் நான்கு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. பிரதமருடன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மலித் சமரவிக்ரம புதுடில்லி சென்றிருந்தார்.
அவர் இந்தியாவுக்குப் புறப்படும் முன்னரே ''சீபா'' ஒப்பந்தம் குறித்து தாம் பேசப்போவதில்லை என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது போல் ''சீபா'' ஒப்பந்தத்தில் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திடலாம் என்று நினைத்துக் கொண்டு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் துண்டுப் பிரசுரம் விநியோகிக்குமளவுக்கு இவர்கள் அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளனர் என்றே கூற வேண்டும்.
இனவாதத்தை தூண்டி விட்டு அதன் மூலம் அரசியல் இலாபம் பெற நினைப்பது இந்தக் காலத்துக்கு உகந்த டெக்னிக் ஆக அமையப் போவதில்லை.
பிரதமர் ரணில் இந்திய விஜயம்
நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டுப் பயண மொன்றை மேற்கொண்டு கடந்த 14ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணமானார். புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமைச்சர்களையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரதமரின் இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதில் ''சீபா'' ஒப்பந்தம் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியில் அமரும் ஸ்ரீல.சு.க. உறுப்பினர்களின்
எண்ணிக்கை குறைகிறது.
பாராளுமன்றம் முதன்முறையாக கூடிய போது எதிர்க்கட்சி வரிசையில் 57 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட ஐ.ம.சு. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவிருப்பதாக மஹிந்த தரப்பு முக்கியஸ்தரும் எதிர்க்கட்சித் தலைவராக கனவு கொண்டிருந்தவருமான குமார வெல்கம தெரிவித்திருந்தார். இச்செய்தி ஊடகங்களில் வெளி வந்திருந்தது. நாட்கள் செல்லச் செல்ல இந்த எண்ணிக்கை 55ஆகவும் அதற்குப் பின்னர் 45 ஆகவும் குறைந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்பினர்கள் 27 பேர் தம்மை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஜனாதிபதி சில நிபந்தனையின் பேரில் அனுமதி அளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியாது. அரசின் திட்டங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு குந்தகமாக செயற்படக் கூடாது என்ற நிபந்தனையின் கீழ் இதற்கு ஜனாதிபதி அனுமதியளித்தார்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் கனவு கலைந்து விட்டது என்றே கூற வேண்டும்.
மஹிந்த தரப்பு சார்பில் பொதுத்தேர்தலின்போது தீவிரமாக மைத்திரி தரப்பை தோற்கடிக்க பிரசாரம் மேற்கொண்ட டி.பி. ஏக்கநாயக்க, கிஷாந்த முத்துஹெட்டிகம சந்திம வீரக்கொடி ஆகியோர் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு மஹிந்த தரப்பை கைவிட்டுள்ளனர். ஐ.ம.சு. கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கைகூடாமற் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
ஊவா மாகாண முதலமைச்சர் பதவி சஷீந்திர ராஜபக் ஷவிடமிருந்து கைநழுவியது
ஊவா மாகாண சபை ஆட்சி ஒன்பது மாதங்களின் பின்னர் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசமானது. ஆனால், முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ்வுக்குப் பதிலாக புதிய முதலமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான சாமர சம்பத் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சாமர சம்பத் திசாநாயக்க கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு. கூட்டமைப்பு பட்டியலில் இரண்டாவதாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். இதே மாவட்டத்தில் ஐ.ம.சு. கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தோல்வியுற்றார். பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தோல்வியுற்ற லக்ஷ்மன் செனவிரத்ன பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து சாமர சம்பத் திசாநாயக்காவை தொடர்ந்து மாகாண சபையில் இருக்கும்படியும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு விட்டுக்கொடுக்கும்படி கோரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதை லக்ஷ்மன் செனவிரத்ன மறுத்ததுடன் இச் செய்தியை பரப்பியவர்களுக்கு எதி ராக மானநஷ்ட ஈடு வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
தேர்தலில் தோல்வியுற்ற லக்ஷ்மன் செனவிரத்ன எம்.பி.யாகிறார்
சாமர சம்பத் திசாநாயக ஊவா மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றுக ்கொண்டார். இவரது பாராளுமன்ற வெற்றிடத்துக்கு பதுளை மாவட்ட ஐ.ம.சு. கூட்டமைப்பு பட்டியலில் அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற லக்ஷ்மன் செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
மஹிந்த தரப்பு ஆதரவாளரான இவர், 22 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
