இலங்கை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை வெற்றிகரமாகக் கையாண்ட தரப்பு, இலங்கை அரசாங்கமா அல்லது அமெரிக்காவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
எண்ணற்ற மீறல்களுடன் நடந்தேறிய இறுதிக்கட்டப் போரின் பின்னர், கடந்த ஆறு ஆண்டுகளாக ஜெனீவாவுக்கும் கொழும்புக்கும் இடையில் ஒரு கயிறிழுப்பு யுத்தம் நடந்து வந்தது.
போரின் போதும், போருக்குப் பின்னரும் இடம்பெற்ற மீறல்களை வெளிப்படுத்தி, அதற்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும், இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பேணப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக சர்வதேச சமூகம் வலியுறுத்தி வந்துள்ளது.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினால், பொறுப்புக்கூறல் மனித உரிமை பேணல் விவகாரங்கள் குறித்து, கொடுக்கப்பட்ட அழுத்தங்களை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
போர் வெற்றியினால் ஏற்பட்ட மமதையும், சிங்கள மக்களிடையே காணப்பட்ட பேராதரவும், பொறுப்புக்கூறல், மனித உரிமை தொடர்பாக கொடுக்கப்பட்ட வெளியுலக அழுத்தங்களை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் குறைத்து மதிப்பிட வைத்திருந்தது.
சர்வதேசத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று சிங்கள மக்கள் மத்தியில் உணர்ச்சிப் பிரவாகமூட்டும் உரைகளை நிகழ்த்தி, மஹிந்த ராஜபக் ஷ தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தி வந்தார்.
இதன் காரணமாக, 2012ஆம் ஆண்டு முதல் முறையாக இலங்கை குறித்த தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தது அமெரிக்கா.
இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட முதலாவது தீர்மானம் என்று கூறப்பட்டாலும், அமெரிக்கா அதனை அவ்வாறு கூறவில்லை.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக- அதற்கு ஆதரவாக கொண்டு வந்த தீர்மானம் என்றே அமெரிக்கா குறிப்பிட்டது.
அது நம்பகமான உள்நாட்டுப் பொறுப்புக்கூறலையே வலியுறுத்தியது. உண்மையில் அந்த தீர்மானம் ஒரு மென் அழுத்தம் என்றே குறிப்பிடலாம்.
அந்த தீர்மானத்தையும் இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
போரில் எந்த மீறல்களும் நிகழவுமில்லை, எந்த விசாரணைகளை நடத்தப் போவதும் இல்லை என்று அடித்துக் கூறியது.
அதையடுத்து. 2013ஆம் ஆண்டு மீண்டும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தது அமெரிக்கா.
அதற்கும் மசியாத நிலையில்தான், 2014ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளையும், உள்நாட்டு பொறுப்புக்கூறலையும் ஊக்குவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது அமெரிக்கா.
இந்த தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்ததற்கு தனியே மனித உரிமைகள் மீது அதற்கு இருக்கும் அக்கறை மட்டும் காரணமல்ல என்ற பொதுவான கருத்து உள்ளது.
போருக்குப் பின்னர், சீன சார்பு அரசாக இலங்கை மாறியதும், சீனாவின் பாதுகாப்பு நலன்களுக்காக கதவைத் திறந்து விட்டதும், மேற்குலக நாடுகளுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியது.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் சீன சார்பு நிலையே, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுகள் கடினமடைவதற்கு காரணமாக இருந்தன என்பதை மறுக்க முடியாது.
தாம் உள்நாட்டு விசாரணை செய்வதாகக் கூறிய போது அதனை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஏற்கவில்லை என்றும், சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியதாகவும், தற்போது உள்நாட்டு விசாரணைக்கு இணங்கியிருப்பதாகவும் மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டதாக அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட கூறியிருந்தார்.
தம்முடன் உள்நாட்டு விசாரணை பற்றிப் பேசவில்லை என்றும், மனித உரிமைகளை வைத்து அரசியல் நடத்தப்படுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதும், மேற்குலகிற்குச் சாதகமான அரசாங்கம் ஒன்று கொழும்பில் நிலைநிறுத்தப்பட்டதும், சர்வதேச விசாரணை அழுத்தங்கள் குறைந்து போனது உண்மை.
எனவே, அமெரிக்காவோ மேற்குலகமோ, இந்த விவகாரத்தை மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் விவகாரமாக முற்றிலும் கருதியிருக்கவில்லை.
இலங்கையில் தாம் விரும்பும் மாற்றத்துக்கான ஒரு கருவியாகவே இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி வந்திருந்தன என்பதில் சந்தேகமில்லை.
கொழும்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமே, ஜெனீவா விவகாரத்தில் அமெரிக்கா எடுத்த நெகிழ்வுப்போக்கான நிலைப்பாடே அதற்குச் சான்று.
இன்னொரு பக்கத்தில் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமும், ஜெனீவாவில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி மாற்றத்துக்கு முன்னைய எல்லா சம்பவங்களுக்கான பழியையும், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் மீது சுமத்தி விட்டு, புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஜெனீவா உரையில் பொய்யான தகவல்கள், வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்திருந்தாலும், சர்வதேச சமூகத்துக்கு அது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இதன் காரணமாக, ஜெனீவாவில், இலங்கைக்குச் சாதகமான நிலை ஒன்று காணப்படுகிறது.
உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காலஅவகாசத்தைப் பெறுவதற்கு முயற்சிக்கிறது.
அடுத்த ஜனவரியில் தொடங்கி, ஒன்றரை ஆண்டுகளுக்குள் அதனை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த உள்நாட்டுப் பொறுப்புக்கூறலையே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தற்போதைக்கு ஏற்றுக்கொண்டால், அது இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியாகவே அமையும்.
போர் முடிந்த பின்னர் ஐந்தரை ஆண்டுகளாக பொறுப்புக்கூறலை மேற்கொள்ளாமல் இழுத்தடித்துக் காலத்தைக் கடத்தியிருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கமும் ஏற்கனவே ஒன்பது மாதங்களைக் கடத்தி விட்டது.
இந்த நிலையில் இன்னும் 20 மாதங்களுக்கு மேல் கால அவகாசத்தைப் பெறும் திட்டத்தில் அரசாங்கம் இருக்கிறது.
ஜெனீவாவில்.....
(04ஆம் பக்கத் தொடர்ச்சி)
*மங்கள சமரவீரவின் அறிக்கையிலும் சரி, ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி வெளியிட்ட கருத்திலும் சரி, குறுகிய காலங்களில் மாற்றங்கள், அதிசயங்கள் ஏற்பட்டு விடாது என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் குறுகிய காலத்துக்குள் சாத்தியப்படாது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே, இலங்கைக்கு இந்தமுறை வழங்கப்படும் காலஅவகாசம், குறுகியதாக இருக்காது. சிலவேளைகளில் அது காலவரையறையற்றதாகவும் கூட இருக்கலாம்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், பொறுப்புக்கூறலை இழுத்தடிக்கும் ஒட்டுமொத்த சிங்கள அதிகாரவர்க்கத்தின் திட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக அமையும்.
மஹிந்த ராஜபக் ஷ எந்த விசாரணைகளையும் நடத்த மாட்டேன் என்று கூறிக் காலம் கடத்தினார். இப்போதைய அரசாங்கம் விசாரணை நடத்தப் போவதாகக் கூறி காலஅவகாசத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக் ஷவையும், இராணுவ அதிகாரிகளையும் புதிய அரசாங்கம் காப்பாற்றியிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் மங்கள சமரவீரவும், அதையே கூறியுள்ளார். அதாவது, ஆட்சி மாற்றம், அவர்களுக்கு இந்தப் பாதுகாப்பை அளித்திருக்கிறது.
ஒரு வகையில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதற்காக கிடைத்துள்ள அங்கீகாரமாகவும் சிங்கள அதிகார வர்க்கம் இதனைக் கருதலாம்.
ஒரு பக்கத்தில் ஜெனீவாவை வைத்து அமெரிக்கா தனது தேவைகளை நிறைவேற்றியிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் இலங்கை அரசாங்கமும், தமது தேவைகளை நிறைவேற்ற முனைகிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு நீதி வழங்கப்படவும் இல்லை. தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவும் இல்லை.
இந்தநிலையில், சர்வதேச சமூகம் தமிழர்களின் நிலைப்பாடு குறித்த கலந்தாலோசனைகளை நடத்தாமலேயே, முடிவுகளை எடுக்கத் துணிந்திருக்கிறது.
ஆக, அமெரிக்காவுக்கோ, இலங்கைக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், தமது நலன் தேடுவதற்கான கருவிகளாகவே இருந்துள்ளன.
ஐ.நா விசாரணை அறிக்கையில், கலப்பு விசாரணை நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையிலும், இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணைக்கு சார்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டால் அதில் அர்த்தம் இருக்காது.
அதேவேளை, அது தமிழர்களுக்கு ஒரு பாடமாகவும் அமையும்.
தம்மை, தமது நலன்களுக்குப் பயன்படுத்த முனையும் வெளிச்சக்திகள் குறித்து தெளிவான நிலை ஒன்றுக்கு வரவேண்டியதன் அவசியம் தமிழர்களால் வலுவாக உணரப்படும்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்படவுள்ள அடுத்த தீர்மானம் தான், யாருக்கு சார்பாக ஜெனீவா நகர்வுகள் சென்று கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள கொள்ள உதவும்.
