சர்வதேச அளவிலும் இலங்கையிலும் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின், அறிக்கை- ஆறு மாத கால தாமதத்தின் பின்னர் ஒருவழியாக வெளியாகி விட்டது.
2002 பெப்ரவரி தொடக்கம் 2011 நவம்பர் வரையான காலப்பகுதியில், இடம்பெற்ற சம்பவங்கள், மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான- ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழு, மார்டி அதிசாரி, அஸ்மா ஜஹாங்கீர், சில்வியா கார்ட்ரைட் ஆகிய மூன்று வெளியக நிபுணர்களின் மேற்பார்வையில் மேற்கொண்ட விசாரணை யின் அறிக்கை இது.
261 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையில், சாட்சியங் கள், ஆதாரங்கள், கண்டறிவுகள் என்று 1281 குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் அடிப்படையில், 39 பரிந்துரைகளையும் இந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், விசாரணை செய்யப்பட்ட 9 ஆண்டு காலப் பகுதியில், இடம்பெற்ற சம்பவங்கள், அரசபடைகள், அவர்களுடன் சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுக்கள், விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட மீறல்களை, நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தும் போது, அவை போர்க்குற்றங்கள், அல்லது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்படுதல், பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலின ரீதியான குற்றங்கள், கண்டபடி நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்கள், சிறார்களைப் படையில் சேர்த்தமை, நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டமை, உணவு, மருந்து போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டமை என்று போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாக நிரூபிக்கப்படக் கூடியவற்றை இந்த விசாரணை அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் நடந்துள்ளன என்று நேரடியாகக் கூறாவிடினும், மறைமுகமாக அதற்கான வாய்ப்புகள் உள்ளதை இந்த அறிக்கை தெளிவாகவே பட்டியலிட்டுள்ளது.
அதேவேளை, இதில் யாருடைய பெயரும் குற்றவாளிகளாக குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், இது குற்றவியல் விசாரணை அல்ல. அத்தகைய விசாரணை ஒன்றில் தான், குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்தப்படும்.
கிட்டத்தட்ட 3,000 சாட்சியங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சாட்சியங்களின் போது, இதுவரை வெளிவராத பல தகவல்கள், ஆதாரங்களும் கூட ஆணைக்குழுவுக்கு கிடைத்திருந்தன.
இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத- பொதுப்பார்வைக்கு வராத, ஒளிப்படங்கள், வீடியோக்கள், செய்மதிப்படங்கள் கூட, இந்த விசாரணையின் போது ஆராயப்பட்டதாகவும், இராணுவ நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மூலம் அவை உறுதி செய்யப்பட்டதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இவற்றின் அடிப்படையில் தான், கண்டபடி பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டமை, நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இடம்பெற்றமை போன்ற குற்றச்சாட்டுக்களை இந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது.
இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தினால் முற்றுமுழுதாக நிராகரித்து விட முடியாத ஒன்றாகவும் மாறியிருக்கிறது.
அதனால் தான், ஒரேயடியாக இதனை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. என்றாலும், சில குற்றச்சாட்டுக்கள் குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் எதிர்ப்புகள் கிளம்பவே செய்கின்றன.
படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக் களை நிராகரித்திருக்கின்ற முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கலப்பு நீதிமன்ற விசாரணையை வரவேற்றிருக்கிறார்.
அத்துடன், தனது கட்டளையின் கீழ் குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும், வேறு சிலரின் கட்டளைப்படி, அதிகாரிகள் ஒருசிலர் செயற்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதேவேளை, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற, பரிந்துரை பொதுவாக சிங்கள அரசியல் தரப்புகளால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
(09ஆம் பக்கம் பார்க்க)
சிறப்பு கலப்பு...(08ஆம் பக்கம் பார்க்க)
தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பாக பரிந்து பேசும் விக்கிரமபாகு கருணாரத்ன கூட இதனை எதிர்த்திருக்கிறார்.
இதற்குப் பதிலாக உள்நாட்டு விசாரணையை ஜனவரியில் தொடங்கி 18 மாதங்களுக்குள் நடத்தப் போவதாகவும், 4 பிரிவுகளாக நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னகர்த்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் மங்கள சமரவீர.
இந்த நிலையில், ஐ.நா. விசாரணை அறிக்கையை ஏற்கவும் முடியாத- அதேவேளை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் செய்தது போன்று அதனை முற்றாக நிராகரிக்கவும் முடியாத இக்கட்டான நிலைக்குள் இலங்கை அரசாங்கம் சிக்கியிருக்கிறது.
ஐ.நா. விசாரணை அறிக்கைக்கு அரசாங்கம் ஜெனீவாவில் அளிக்கப் போகும் பதில் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்பதாக இருக்கும்.
இந்த விசாரணை அறிக்கையும் சரி, இதனை வெளியிட்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையும் சரி, சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைத்து குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்கின்றன.
அறிக்கையிலும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையிலும், சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தால் மட்டும் போதாது.
இவர்களுக்கு அதை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்கள் இல்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தான், அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க வேண்டும்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்றால், அதில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளும் சேர்ந்தே முடிவெடுக்க வேண்டும்.
அதற்கு முன்னதாக, அடுத்து என்ன என்பதை தீர்மானிக்கும் ஒரு தீர்மானம் பேரவையில் முன்வைக்கப்பட வேண்டும்.
அதனை முன்வைக்கப் போவது வழக்கம் போலவே, அமெரிக்காவும்,அதன் நட்பு நாடுகளும் தான்.
இலங்கை அரசாங்கத்தின் கருத்தொருமைப்பாட்டுடன், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை வலுப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாக அமெரிக்கா ஏற்கனவே கூறியிருக்கிறது.
அதற்குப் பின்னர் தான், ஐ.நா. விசாரணை அறிக்கை கலப்பு நீதிமன்றம் என்ற பரிந்துரையை செய்திருக்கிறது.
இந்தநிலையில், அமெரிக்கா முன்வைத்திருக்கின்ற முதலாவது தீர்மான வரைவில், கலப்பு நீதிமன்றம் அமைத்து போர்க்குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றே கோரப்பட்டுள்ளதாகவும், அந்த வரைவு இலங்கை அரசிடம் கடந்தவாரம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எனினும், கலப்பு நீதிமன்றம் உடனடியாக அமைக்கப்படுமா என்ற கேள்வி இருக்கிறது.
ஏனென்றால், அதற்கு இலங்கை அரசாங்கமும் உடன்பட வேண்டும், இலங்கை அரசாங்கத்தை இப்போது அரவணைக்கின்ற அமெரிக்கா போன்ற மேற்குலக சக்திகளும் விரும்ப வேண்டும்.
இலங்கை அரசாங்கத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்க மேற்குலக சக்திகள் விரும்பாது போனால், உள்நாட்டு விசாரணைக்கு குறுகிய காலஅவகாசம் ஒன்றைக் கொடுக்கும் தீர்மானத்தை முன்வைக்கலாம்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது.
இலங்கையின் தற்போதைய நீதித்துறைக் கட்டமைப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நம்பகத்தன்மை கொண்டதல்ல என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விசாரணைக்கு காலஅவகாசம் அளிப்பது எந்தளவுக்கு நியாயப்பாடு கொண்டது என்ற கேள்வியும் உள்ளது.
எனவே இந்த கலப்பு நீதிமன்ற பரிந்துரையானது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளையும் கூட சங்கடத்தில் தான் சிக்க வைத்திருக்கிறது.
கலப்பு நீதிமன்றத்தை அமைக்கப் பரிந்துரை செய்யும் தீர்மானத்தை பேரவை நிறைவேற்றினால் அதற்கு இலங்கை இணங்க வேண்டும்.
அவ்வாறு இணங்க மறுத்தால் கலப்பு நீதிமன்றத்தை அமைத்து விசாரிக்க முடியாது.
தற்போதுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் கலப்பு நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்றே கூறலாம்.
ஒட்டுமொத்த சிங்கள அரசியல் தலைமைகளுமே, அதனை ஏற்கத்தக்க நிலையில் இல்லை.
அது நாட்டின் இறைமையை மீறிய செயலாகவே பார்க்கின்றன.
வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், சட்டத்தரணிகள் இந்தக் கலப்பு நீதிமன்றத்தில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்ற கலப்பு நீதிமன்றம், ஐ.நா. விசாரணைகளின் முடிவில், கம்போடியா, லெபனான், சாட், கிழக்கு திமோர், சியாராலியோன் போன்ற நாடுகளில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
கம்போடியாவில் கெமரூஜ் கால போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்றடுக்கு, கலப்பு நீதிமன்றத்தில், தீர்ப்புகளை வழங்கும் அமர்வின் தலைவராகப் பணியாற்றிய நியூஸிலாந்து நீதிபதி சில்வியா கார்ட்ரைட் அம்மையார், இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் வெளியக நிபுணர்களில் ஒருவராகப் பணியாற்றியிருந்தார்.
அவரது விசாரணை அனுபவங்கள், இந்தப் பரிந்துரையில் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது.
ஆனால் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.
எனினும், கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க சட்டத்தில் இடமுள்ளதாக உதய கம்மன்பி்ல கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
எவ்வாறாயினும், இம்மாத இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தான், அடுத்த கட்டத்தை தீர்மானிப்பதாக இருக்கும்.
கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் தீர்மானம் பேரவையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அதனை நிராகரிக்கவும் முடியாது ஏற்கவும் முடியாத இக்கட்டான நிலைக்குள் அரசாங்கம் தள்ளப்படும்.
அது மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சோதனையாகவே இருக்கும்.
N.kannan
